46 வயதில் தாயான நடிகை பத்மபிரியா... குழந்தையின் முதல் பிறந்தநாளில் வெளியானது அப்டேட்!
‘தவமாய் தவமிருந்து’, ‘சத்தம் போடாதே’ மற்றும் ‘பொக்கிஷம்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துப் புகழ்பெற்ற நடிகை பத்மபிரியா, தனது 46-வது வயதில் தாயாகியுள்ளார். தனது கர்ப்பக் காலம் குறித்த எந்தவொரு தகவலையும் அவர் சமூக வலைதளங்களிலோ அல்லது ஊடகங்களிலோ வெளிப்படுத்தாமல் ரகசியமாக வைத்துள்ளார். தற்போது குழந்தைக்கு 1 வயது நிறைவடைந்துள்ள நிலையில், குழந்தையின் முதல் பிறந்தநாளை முன்னிட்டு இந்த மகிழ்ச்சியான செய்தியை அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். குழந்தையின் குட்டிச் சிறிய கைகளைப் பிடித்துள்ள அழகிய புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.
கடந்த 2014-ஆம் ஆண்டு ஜாஸ்மின் ஷா என்பவரைத் திருமணம் செய்து கொண்ட பத்மபிரியாவிற்கு, திருமணமான 10 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது குழந்தை பிறந்துள்ளது. "வாழ்க்கையின் 365 நாட்கள்" என்ற நெகிழ்ச்சியான வரிகளுடன் அவர் பதிவிட்டுள்ள இந்தப் புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. திரைத்துறையைச் சேர்ந்த நடிகைகள், முக்கிய நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் பத்மபிரியாவின் குடும்பத்தினருக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என்ற விபரங்களை அவர் இன்னும் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.
கடந்த ஒரு ஆண்டாக சமூக வலைதளப் பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வந்தபோதிலும், குழந்தை பிறந்த தகவலை அவர் மிகவும் ரகசியமாகப் பராமரித்து வந்துள்ளார். நடிகை அபிராமியின் கமெண்ட்டிற்குப் பதிலளித்துள்ள பத்மபிரியா, "நாங்கள் இதை அடைவதற்கு நீங்களே முக்கியக் காரணம்" எனக் குறிப்பிட்டுள்ளார். இதனால் நடிகை அபிராமியைப் போலவே பத்மபிரியாவும் குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கிறாரா என்ற புதிய விவாதமும் இணையத்தில் எழுந்துள்ளது.