ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்! 28 தீவிரவாதிகள் பலி என தகவல்.. பதற்றம் அதிகரிப்பு

 

 

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டிய பகுதிகளில் தீவிரவாத முகாம்கள் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளின் மறைவிடங்கள் மற்றும் முகாம்களை குறிவைத்து திங்கள்கிழமை இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் 28 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் தரப்பு கூறியுள்ளது.

பாகிஸ்தான் தகவலின்படி, மூன்று தீவிரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டுள்ளன. அவற்றில் தற்கொலைப்படை தாக்குதலுக்குப் பயிற்சி அளிக்கும் மையம் ஒன்றும் அடங்கும். அங்கிருந்த ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களும் அழிக்கப்பட்டதாக அந்நாட்டு தகவல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சமீபகாலமாக பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா பகுதியில் பாதுகாப்புப் படையினர் மற்றும் போலீசாரை குறிவைத்து தொடர் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. இந்த தாக்குதல்களுக்கு பாகிஸ்தான், தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) மற்றும் அதனுடன் தொடர்புடைய அமைப்புகளை குற்றம்சாட்டி வருகிறது. ஆப்கானிஸ்தான் தனது மண்ணில் இருந்து தீவிரவாதிகள் செயல்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்து வருகிறது.

இதற்கிடையே, பாகிஸ்தானின் தாக்குதல்கள் குறித்து ஆப்கானிஸ்தான் தரப்பு வேறுபட்ட தகவலை வெளியிட்டுள்ளது. தாக்குதலில் 3 பொதுமக்கள் உயிரிழந்ததாகவும், 4 பேர் காயமடைந்ததாகவும் காபூல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் சேதமடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

இதனால், பாகிஸ்தான் கூறும் 28 தீவிரவாதிகள் உயிரிழப்பு மற்றும் ஆப்கானிஸ்தான் கூறும் பொதுமக்கள் உயிரிழப்பு ஆகிய தகவல்களுக்கு இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இரு தரப்பின் கூற்றுகளையும் சுயாதீனமாக உடனடியாக உறுதி செய்ய முடியவில்லை என சர்வதேச செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.இந்த தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் பதற்றம் மேலும் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலைத் தணிக்க பிராந்திய நாடுகள் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கும் இந்த சம்பவம் சவாலாக அமைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.