மும்பை தாக்குதல் குற்றவாளி மசூத் அசார் பற்றி தகவலளித்தால் ரூ.70 லட்சம் பரிசு - பாகிஸ்தான் அறிவிப்பு!

 

மும்பை தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு இந்தியத் தாக்குதல்களுக்கு மூளையாகச் செயல்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் நிறுவனர் மசூத் அசார் குறித்த துப்பு அளிப்போருக்கு ரூ.70 லட்சம் பரிசு வழங்கப்படும் எனப் பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

பாகிஸ்தானை தளமாகக் கொண்டு இயங்கும் பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமதுவின் தலைவர் மசூத் அசார் (58) குறித்து தகவல் அளிப்பவர்களுக்கான சன்மானத் தொகையை 7 மில்லியன் பாகிஸ்தான் ரூபாயாக (இந்திய மதிப்பில் சுமார் ரூ.70 லட்சம்) அந்நாட்டின் கூட்டாட்சி விசாரணை முகமை உயர்த்தியுள்ளது.

இந்திய நாடாளுமன்றத் தாக்குதல் (2001), மும்பை தாக்குதல் (2008), பதான்கோட் விமானப்படைத் தளம் தாக்குதல் (2016) மற்றும் புல்வாமா குண்டுவெடிப்பு (2019) உள்ளிட்ட பல வழக்குகளில் தேடப்படும் குற்றவாளியான இவரை ஐ.நா. பாதுகாப்பு சபை ஏற்கனவே சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்துள்ளது.

சர்வதேச நிதியியல் நடவடிக்கை பணிக்குழுவின்  'சாம்பல் பட்டியலில்' தங்கள் நாடு மீண்டும் இடம்பெற்று பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காகவே பாகிஸ்தான் இந்த உத்தியைக் கையாண்டுள்ளதாக சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். மசூத் அசார் வெளிநாடுகளில் பதுங்கியிருப்பதாகப் பாகிஸ்தான் தொடர்ந்து வாதிட்டு வந்தாலும், அவர் மீதான தேடலைத் தீவிரப்படுத்துவது போன்ற இந்த நாடகம் உலக நாடுகளின் பார்வையில் இருந்து தப்பவே நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.