குவைத்தின் பாதுகாப்பு ஒப்பந்த கோரிக்கையை நிராகரித்தது பாகிஸ்தான்... ராணுவப் படைகளை அனுப்ப மறுப்பு!

 

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், பாகிஸ்தானுடன் சவுதி அரேபியா பாணியிலான கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்த குவைத் அரசு எடுத்த முயற்சியைப் பாகிஸ்தான் நிராகரித்துள்ளது.

சவுதி அரேபியாவில் பாகிஸ்தான் ராணுவம் நிலைநிறுத்தப்பட்டிருப்பது போல, தங்கள் நாட்டிலும் ஆயிரக்கணக்கான பாகிஸ்தான் போர் வீரர்கள், போர் விமானங்கள், வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ட்ரோன்களை நிறுத்த குவைத் கோரிக்கை விடுத்திருந்தது.

மத்திய கிழக்கில் நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, தனது நாட்டின் எல்லையைப் பலப்படுத்தவே குவைத் இந்த விருப்பத்தைத் தெரிவித்தது. குவைத்தின் இந்தக் கோரிக்கையைப் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. தற்போதைய சூழலில் குவைத்திற்குப் போர் துருப்புகளை அனுப்பும் திட்டம் எதுவும் இல்லை என்று பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே சவுதி அரேபியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் வைத்துள்ள பாகிஸ்தான், தற்போது அமெரிக்கா - ஈரான் இடையேயான மோதலில் நேரடியாகச் சிக்க விரும்பவில்லை. ஈரானின் நேரடி அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் குவைத்திற்குப் படைகளை அனுப்பினால், அது தங்களுக்குத் தேவையற்ற அரசியல் மற்றும் பாதுகாப்புச் சிக்கல்களை உருவாக்கும் என பாகிஸ்தான் கருதுகிறது. படைகளை அனுப்ப மறுத்த போதிலும், இரு நாடுகளுக்கும் இடையே மாற்று ஏற்பாடுகள் குறித்து ஒப்புதல் எட்டப்பட்டுள்ளது:

நேரடிப் படைகளுக்குப் பதிலாக, குவைத்திற்குத் தேவையான ராணுவப் பயிற்சிகளை வழங்குவது மற்றும் உளவுத்துறைத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வது தொடர்பான 5 ஆண்டு கால பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு பாகிஸ்தான் சம்மதம் தெரிவித்துள்ளது. பதிலுக்கு, குவைத்திடமிருந்து பெருமளவிலான நிதி மற்றும் எரிசக்தித் துறை சார்ந்த முதலீடுகளைப் பெற பாகிஸ்தான் அரசு தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.