எல்லையில் ஊடுருவல் முயன்ற 2 பேர் சுட்டுக்கொலை - இந்தியத் தூதரை அழைத்து பாகிஸ்தான் கண்டனம்!
பஞ்சாப் மாநில எல்லைப் பகுதியில் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற இருவரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பாக, இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியத் தூதரை நேரில் அழைத்துப் பாகிஸ்தான் அரசு தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
பஞ்சாபின் டர்ன் தாரன் மாவட்ட சர்வதேச எல்லைப் பகுதி வழியாக நேற்று மதியம் மூன்று பேர் சந்தேகத்திற்குரிய வகையில் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றனர்.
எல்லைப் பாதுகாப்புப் படையினர் பலமுறை எச்சரித்தும் அதைக் பொருட்படுத்தாமல் அவர்கள் தொடர்ந்து முன்னேறியதால், பிஎஸ்எஃப் வீரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருவர் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்டவர்கள் ஆயுதம் ஏந்திய ஊடுருவல்காரர்கள் என இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தவறுதலாக எல்லையைத் தாண்டிய அப்பாவிப் பொதுமக்கள் என்று பாகிஸ்தான் வாதிடுகிறது. இது குறித்து விளக்கம் கோரி இந்தியத் தூதருக்குச் சம்மன் அனுப்பப்பட்டு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.