துருக்கியிடம் இருந்து 1 லட்சம் டிரோன்கள் வாங்கும் பாகிஸ்தான்... ரூ.939 கோடிக்கு ராணுவ ஒப்பந்தம்!

 

 

இந்தியாவுடன் நீண்டகாலமாக மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் பாகிஸ்தான், தனது ராணுவ பலத்தை அதிகரிக்கும் வகையில் துருக்கியிடம் இருந்து 1 லட்சம் டிரோன்களை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது.

துருக்கியைச் சேர்ந்த பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனமான பசிபிக் டெக்னாலஜி (Pasifik Teknoloji) உடன், பாகிஸ்தான் அரசு 3 ஆண்டுகளுக்கான ராணுவ ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ.939 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி, 1 லட்சம் மெர்குட் (MERKÜT) வகை எப்.பி.வி. டிரோன்கள் வாங்கப்பட உள்ளன. இவை நேரடி கேமரா காட்சிகள் மூலம் இயக்கப்படும் தாக்குதல் டிரோன்கள் ஆகும். இதுதவிர, 10 அல்பின் ஆளில்லா ஹெலிகாப்டர்கள், 25 டும்ருல் மினி ஹெலிகாப்டர்கள், 500 டெலி ரக தாக்குதல் டிரோன்கள் மற்றும் 250 கோர்கன் தானியங்கி தரை ஆதரவு அமைப்புகளும் ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளன.

இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாக, டிரோன்களை பாகிஸ்தானிலேயே ஒன்றுசேர்த்து தயாரிப்பதற்கான ஏற்பாடுகளும் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்பு மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளது.