சந்தையில் பயங்கர குண்டுவெடிப்பு... 9 பேர் பலி...பெண்கள் உட்பட 30 பேர் படுகாயம்!

 

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள லக்கி மார்வாட் மாவட்டம், சரை நவ்ரங் பகுதியில் இயங்கி வரும் நெரிசலான சந்தையில் இன்று குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. வழக்கம்போல மக்கள் பொருட்களை வாங்கிக்கொண்டிருந்த சமயத்தில், அங்கு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு திடீரென வெடித்துச் சிதறியது. இந்தத் தாக்குதலில் பெண்கள் உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக விரைந்து சென்று, காயமடைந்த 30 பேரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு, விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தை ஆய்வு செய்த தடயவியல் நிபுணர்கள், ஆதாரங்களைத் திரட்டி வருகின்றனர்.

பாகிஸ்தானில் தொடர்ச்சியாகத் தாக்குதல்களை நடத்தி வரும் 'தெஹ்ரிக் இ தலிபான்' அமைப்புதான் இந்தச் செயலைச் செய்திருக்கக்கூடும் என்று அரசு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான்களின் நிழல் அமைப்பாகச் செயல்பட்டு வரும் இந்த பயங்கரவாதக் குழு, பாகிஸ்தானின் அமைதியைக் குலைக்கும் நோக்கில் செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. தாக்குதலை நடத்தியவர்கள் யார் என்பது குறித்து விரிவான விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.