பாகிஸ்தானில்  தற்கொலை தாக்குதல் ...  அமைதி பேரணியில் குழந்தை உட்பட 14 பேர் பலி!

 

பாகிஸ்தானின் வடமேற்கே கைபர் பக்துன்குவா மாகாணத்தில் ஸ்வாட் மாவட்டத்தில் உள்ள காபல் நகரில் நேற்று அமைதி பேரணி நடைபெற்றது. இந்த அமைதி பேரணியில் தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டதில், குழந்தை, பொதுமக்கள், அதிகாரி மற்றும் போலீசார் என மொத்தம் 14 பேர் உயிரிழந்தனர். மேலும் 12-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அமைதியை வலியுறுத்தி நடத்தப்பட்ட இந்த பேரணியில் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்ட வேளையில் இந்த கோர சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த கொடூர தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத குழுவும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பாதுகாப்பு படையினர் மற்றும் காவல்துறையினர் அப்பகுதியை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அடுத்தடுத்து நடைபெறும் இதுபோன்ற வன்முறை சம்பவங்கள் அந்த நாட்டு மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.