பழனி கோயில் நில மோசடி விவகாரம் - முருகதாஸ் சாமிகள் உட்பட 3 பேர் தலைமறைவு!
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான சுமார் ₹100 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாக விற்பனை செய்த வழக்கில், முக்கியக் குற்றவாளிகள் மூன்று பேர் தலைமறைவாகியுள்ளனர். தலைமறைவான நபர்களைப் பிடிக்கச் சிபிசிஐடி போலீசார் தனிப்படைகள் அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
திமுக சட்டத் துறை இணைச் செயலாளர் பரந்தாமன் இந்த நில விவகாரத்தில் பினாமி பரிவர்த்தனை நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டிய சில மணி நேரங்களிலேயே, இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் தங்களது அதிரடி நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். கோயில் நிலத்தை சட்டவிரோதமாக விற்பனை செய்த நில உரிமையாளரான முருகதாஸ் சாமிகள், அதனை விலைக்கு வாங்கிய பழனி சேதுபதி மற்றும் வெள்ளத்துரை ஆகிய மூவரும் போலீஸ் கைதுக்கு அஞ்சித் தலைமறைவாகியுள்ளனர்.
இந்த இமாலய மோசடிக்குப் பின்புலமாக இருந்து, விதிமுறைகளை மீறி 67 கி.மீ தொலைவிலிருந்து வந்து பத்திரப் பதிவு செய்து கொடுத்த சார்பதிவாளர் ஜஸ்டிஸ் மணிகண்டன் என்பவரும் இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், தலைமறைவாகியுள்ள மூவர் மற்றும் சார்பதிவாளர் ஜஸ்டிஸ் மணிகண்டன் உட்பட மொத்தம் நான்கு பேர் மீது சிபிசிஐடி போலீசார் கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அரசு மற்றும் கோயில் நிலத்தைப் போலி ஆவணங்கள் மூலம் முறைகேடு செய்தல், அரசு அதிகாரியைத் தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் கூட்டுச்சதி உள்ளிட்ட 5 முக்கியக் கடுமையான பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு அமையப் பெற்றுள்ளது.
கோயில் நிலத்தை மீட்டெடுக்கவும், முறைகேட்டில் ஈடுபட்ட அதிகார வர்க்கத்தினரின் பின்னணியை வெளிக்கொண்டு வரவும் தலைமறைவான மூவரையும் உடனடியாகக் கைது செய்ய வேண்டியது அவசிய என்பதால், சிபிசிஐடி போலீசார் தங்களது தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.