பழனி கோயில் நில முறைகேடு... சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு நிபந்தனையுடன் முன்ஜாமின்!
பழனியில் சுமார் ரூ. 100 கோடி மதிப்புள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை முறைகேடாகப் பதிவு செய்த வழக்கில், சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
கோயில் நில முறைகேடு வழக்கில் கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்கச் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் தரப்பில் உயர் நீதிமன்ற கிளையில் முன்ஜாமின் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு முன்ஜாமின் வழங்கியதோடு சில முக்கிய நிபந்தனைகளையும் விதித்துள்ளது.
ஜஸ்டின் மணிகண்டன் வரும் ஜூலை 27-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 3-ஆம் தேதி வரை திண்டுக்கல்லில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் தினமும் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு அழைக்கும் போது அவர் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பழனி முருகன் கோயிலுக்குச் சொந்தமான, பல நூறு கோடி ரூபாய் மதிப்புமிக்க நிலங்களைச் சில தனி நபர்களுக்குச் சட்டவிரோதமாகப் பத்திரப் பதிவு செய்து கொடுத்ததாகச் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்த முறைகேடு குறித்துத் தற்பொழுது சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நில மோசடிப் பின்னணியில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பிருக்கிறது என்பது குறித்தும், இடைத்தரகர்கள் எவரேனும் செயல்பட்டார்களா என்பது குறித்தும் சிபிசிஐடி அதிகாரிகள் தங்களது விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.