பாம்பன் புதிய பாலத்தில் அதிர்ச்சி ... ரயிலில் இருந்து கடலில் குதித்து இளைஞர் பலி!
ராமேசுவரம் அருகே பாம்பன் புதிய ரெயில் பாலத்தில் சென்றபோது, ஓடும் ரெயிலில் இருந்து கடலில் குதித்த சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் உயிரிழந்தார்.
ராமேசுவரத்தில் இருந்து மதுரைக்கு கடந்த சனிக்கிழமை மாலை 6 மணியளவில் பயணிகள் ரெயில் புறப்பட்டது. இந்த ரெயில் பாம்பன் புதிய பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது, தூக்குப்பாலம் அருகே பயணம் செய்த வாலிபர் திடீரென கடலில் குதித்ததாகக் கூறப்படுகிறது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக பயணிகள், உடனடியாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவரைத் தேடும் பணி நடைபெற்றது.
இதற்கிடையே, மண்டபம் அருகே நடுக்கடலில் உள்ள முள்ளிமுனை தீவில் வாலிபரின் உடல் கரை ஒதுங்கிக் கிடப்பதாக கடலோர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார், மீனவர்களின் உதவியுடன் உடலை மீட்டனர்.உயிரிழந்த வாலிபர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது இதுவரை தெரியவில்லை. அவர் கடலில் குதித்ததற்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.