‘பாண்டியன் ஸ்டோர்ட்ஸ்’ நடிகை சாந்தினி தவெக-வில் இணைந்தார் - உறுப்பினர் அட்டையை வெளியிட்டு உற்சாகம்!

 

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுத் தவெக தனது உறுப்பினர் சேர்க்கை மற்றும் தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், சின்னத்திரை நடிகை சாந்தினி பிரகாஷ் அக்கட்சியின் அடிப்படை உறுப்பினராகத் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். 

ஜீ தமிழ் தொலைக்காட்சியின் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ள சாந்தினி பிரகாஷ், குறிப்பாக கூமாப்பட்டி தங்கப்பாண்டியுடன் இணைந்து நடித்த காமெடி மற்றும் நடனக் காட்சிகளுக்காக மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவர். இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் தளங்களில் லட்சக்கணக்கான ரசிகர்களைக் கொண்டுள்ள இவர், தனது தனித்துவமான நடிப்புத் திறமையால் இளைஞர்கள் மத்தியில் அதிக செல்வாக்குப் பெற்றுள்ளார்.

தனது அரசியல் பயணத்தின் தொடக்கமாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் செயலி மூலம் உறுப்பினர் சேர்க்கையை முடித்துள்ள சாந்தினி பிரகாஷ், தனக்கு வழங்கப்பட்ட உறுப்பினர் அடையாள அட்டையை  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். "தளபதியின் பாதையில் மக்களின் நலனுக்காக இணைந்ததில் மகிழ்ச்சி" என்ற பொருள்பட அவர் தனது பதிவைப் பகிர்ந்துள்ளார்.

நடிகர் விஜய் தலைமையிலான தவெக-வில் ஏற்கனவே ஏராளமான திரையுலகினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து வருகின்றனர். 2026 தேர்தலில் நட்சத்திரப் பேச்சாளராகச் சாந்தினி பிரகாஷ் களமிறக்கப்படலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது கட்சியின் தேர்தல் பிரசாரத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.