பழனியில் பங்குனி உத்திரத் திருவிழா.. ஏப்ரல் 1ல் தேரோட்டம்!

 

அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில், பங்குனி உத்திரத் திருவிழா நேற்று காலை 9.45 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு 'அரோகரா' முழக்கத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவிழாவையொட்டி, சேவல் மற்றும் மயில் உருவங்கள் பொறிக்கப்பட்ட கொடிக்குச் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர், மங்கல வாத்தியங்கள் முழங்கக் கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து கொடிமரத்திற்குப் பால், பன்னீர் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது.

10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் முக்கிய நிகழ்வுகளாக மார்ச் 31 (செவ்வாய்): முத்துக்குமாரசுவாமி, வள்ளி - தெய்வானை திருக்கல்யாணம். ஏப்ரல் 01 (புதன்): பங்குனி உத்திரத் திருநாளை முன்னிட்டுப் பழனி கிரிவீதியில் மகா தேரோட்டம். ஏப்ரல் 04 (சனி): கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

பழனி முருகன் சிலை நவபாஷாணத்தால் ஆனது என்பதால், கோடை காலமான பங்குனி மற்றும் சித்திரை மாதங்களில் முருகனை குளிர்விக்கப் பக்தர்கள் காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக் காவடி எடுத்து வந்து அபிஷேகம் செய்வது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.

திருவிழா காலங்களில் வழக்கமாகத் தங்கத்தேர் புறப்பாடு நிறுத்தப்படுவதுண்டு. அந்த வகையில், இந்த ஆண்டு பங்குனி உத்திர விழாவையொட்டி மார்ச் 30 முதல் ஏப்ரல் 3 வரை (ஐந்து நாட்கள்) தங்கத்தேர் புறப்பாடு நிறுத்தப்படுவதாகக் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

பக்தர்களின் வசதிக்காகக் குடிநீர், நிழற்பந்தல் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பழனி கோவில் நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் தீவிரமாகச் செய்து வருகின்றனர்.