"கல்யாண வரம் தரும் பங்குனி உத்திரம்!" - இந்த வருஷம் செவ்வாய்க்கிழமை வர்றது இன்னும் ஸ்பெஷல் - மறக்காம இதைப் பண்ணுங்க!

 

தமிழ் மாதங்களில் 12-வது மாதமான பங்குனி மாதத்தில் வரும் 'உத்திரம்' நட்சத்திரமும், 'பௌர்ணமி' திதியும் இணையும் நாளே பங்குனி உத்திரம் ஆகும். இது தெய்வங்களின் திருமணங்கள் நடைபெற்ற புனித நாளாகக் கருதப்படுகிறது.

இந்த ஆண்டு பங்குனி உத்திரம் மார்ச் 31, 2026 (செவ்வாய்க்கிழமை) அன்று வருகிறது. பௌர்ணமி தொடக்கம்: மார்ச் 30, 2026 அன்று இரவு. பௌர்ணமி மற்றும் உத்திரம் இணையும் நேரம்: மார்ச் 31, 2026 முழுவதும் உத்திரம் நட்சத்திரம் நீடிப்பதால், அன்றைய தினமே வழிபாட்டிற்கு உகந்த நாளாகும்.

இந்த நாள் முருகப் பெருமான், சிவன், விஷ்ணு ஆகிய மூவருக்கும் உரிய நாளாகும். அதிகாலையில் நீராடி, நாள் முழுவதும் விரதம் இருந்து மாலையில் கோயிலுக்குச் சென்று வழிபட வேண்டும். முருகப் பெருமானுக்குப் பால் குடம் எடுத்தல், காவடி எடுத்தல் போன்ற நேர்த்திக்கடன்களைச் செலுத்தலாம்.

இந்த நாளில் தான் சிவ-பார்வதி, ராம-சீதை, முருகன்-தெய்வானை ஆகியோரின் திருமணங்கள் நடைபெற்றதாகப் புராணங்கள் கூறுகின்றன. எனவே, அருகிலுள்ள கோயில்களில் நடைபெறும் திருமண வைபவத்தைத் (திருக்கல்யாணம்) காண்பது பெரும் புண்ணியம் தரும். "ஓம் சரவணபவ" அல்லது "ஓம் நமசிவாய" மந்திரங்களை 108 முறை ஜெபிப்பது சிறந்தது.

நீண்ட நாட்களாகத் தள்ளிப் போகும் திருமணங்கள் கைகூடும். பிரிந்திருக்கும் கணவன் - மனைவி ஒன்று சேரவும், குடும்பத்தில் அமைதி நிலவவும் இந்த விரதம் உதவும். குழந்தை வரம் வேண்டுபவர்கள் இந்த நாளில் முருகப் பெருமானை மனமுருகி வேண்டினால் நற்பலன் கிடைக்கும்.

குறிப்பாகச் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் மார்ச் 31ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று வரும் இந்தப் பங்குனி உத்திரத்தில் முருகனை வழிபட்டால் தோஷங்கள் நீங்கும். 

"கப்பு முக்கியம் இல்ல.. கிரிவலம் தான் முக்கியம்"னு சுத்துற பக்தர்களுக்கு அடுத்த ஒரு ஜாக்பாட் இருக்கு. அது தான் பங்குனி உத்திரம். மார்ச் 31-ஆம் தேதி நம்ம முருகப் பெருமானுக்குத் தடல்புடலா விசேஷம் நடக்கப்போகுது. முருகனுக்கும் தெய்வானைக்கும் கல்யாணம் நடந்த இந்த நாள்ல, கல்யாணம் ஆகாதவங்க விரதம் இருந்தா சீக்கிரம் கெட்டி மேளம் சத்தம் கேட்கும். அதுவும் இந்தத் தடவை முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமையே பங்குனி உத்திரம் வர்றதால, ‘பவர்’ கொஞ்சம் அதிகம் தான். அண்ணாமலையார் கோயில்ல இருந்து பழனி வரைக்கும் பக்தர்கள் கூட்டம் இப்போவே களைகட்ட ஆரம்பிச்சுடுச்சு. ரெடியா இருங்க மக்களே!