சென்னை ஐஐடி மேம்பாலத்தில் பயங்கரம்! பைக்கில் வேகமாக சென்ற 21 வயது இளைஞர் கீழே விழுந்து பலி

 

 

சென்னையில் ஐஐடி மேம்பாலத்தில் பைக்கில் வேகமாக சென்ற 21 வயது இளைஞர், கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவரில் மோதி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னை சைதாப்பேட்டை பகுதியில் இருந்து மத்திய கைலாஷ் நோக்கி இளைஞர் குகன் தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். சனிக்கிழமை இரவு சர்தார் படேல் சாலையில் உள்ள ஐஐடி மேம்பாலத்தில் அவர்கள் சென்று கொண்டிருந்தபோது, பைக் வேகமாக சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் மேம்பாலத்தின் தடுப்புச்சுவரில் மோதியது. இதில் பைக்கில் சென்ற குகன் தூக்கி வீசப்பட்டு மேம்பாலத்தின் கீழே விழுந்தார். அவருடன் சென்ற நண்பருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த குகனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

உயிரிழந்த குகன் இருசக்கர வாகன மெக்கானிக்காக இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, சென்னையில் நுங்கம்பாக்கம், ஜெமினி, கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவு பைக் ரேஸ் மற்றும் ஆபத்தான சாகசங்களில் இளைஞர்கள் ஈடுபட்டதாகவும், இதுதொடர்பாக பலரை போலீசார் கைது செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

எனினும், குகன் அந்த பைக் ரேஸ் குழுவில் இடம்பெற்றிருந்ததாக கூற முடியாது என்றும், அவர் வேகமாக பைக்கை ஓட்டியபோது கட்டுப்பாட்டை இழந்ததே விபத்துக்கு காரணம் என போலீசார் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் நள்ளிரவு நேரங்களில் பைக் ரேஸ் மற்றும் ஆபத்தான சாகசங்கள் தொடர்பாக போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இளைஞர் ஒருவர் மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.