தாம்பரம் அரசு மருத்துவமனையில் பரபரப்பு... "கடித்த பாம்பை உயிருடன் பிடித்து எடுத்து வந்த இளைஞர்”!
சென்னை தாம்பரம் பகுதியில் மரப்பலகை அடியில் பதுங்கியிருந்த பாம்பு கடித்ததால் பதற்றமடையாத இளைஞர் ஒருவர், அந்தப் பாம்பைப் பிடித்துப் பிளாஸ்டிக் பாட்டிலில் அடைத்துக்கொண்டு சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு வந்த சம்பவம் மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை தாம்பரம் பகுதியைச் சேர்ந்த மையூர் சாகீக் (36) என்பவர் தனது வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த போது, அங்கிருந்த மரப்பலகையின் அடியில் பதுங்கியிருந்த சிறிய பாம்பு ஒன்று அவரது கையில் கடித்தது. பாம்பு கடித்தவுடன் பதற்றமடையாமல் லாவகமாகச் செயல்பட்ட அவர், தன்னைக் கடித்த பாம்பைப் பிடித்து ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் அடைத்துக் கொண்டார்.
தாம்பரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அந்தப் பாட்டிலுடன் அவர் வந்ததைக் கண்ட சக நோயாளிகளும், மருத்துவமனை ஊழியர்களும் அதிர்ச்சியடைந்தனர். மருத்துவர்கள் தமக்குச் சரியான சிகிச்சையை அளிப்பதற்காக எந்த வகை பாம்பு என்று அடையாளம் காட்டவே இதனைக் கொண்டு வந்ததாக அவர் தெரிவித்தார்.
மருத்துவர்கள் அந்தப் பாம்பை ஆய்வு செய்ததில், அது விஷமில்லாத சாதாரண பாம்பு என்பது தெரியவந்தது. இருப்பினும், அவருக்குத் தேவையான முதலுதவி சிகிச்சையும் தடுப்பூசியும் செலுத்தப்பட்டு, தற்போது மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார்.