ஹோட்டல் பிரியர்களே உஷார்... பன்னீர், சீஸ் பெயரில் நடக்கும் மோசடி!  

 

உணவகங்களில் வழங்கப்படும் உணவுகளில் கலப்படம் அதிகரித்து வருவதைத் தடுக்க மகாராஷ்டிர அரசு அதிரடியான புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக, பன்னீர் மற்றும் சீஸ் போன்ற உணவுகளில் வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்படுவதாக வந்த புகார்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனி உணவகங்கள் தங்களது மெனு கார்டுகளில் அந்த உணவுகள் எதனால் தயாரிக்கப்பட்டது என்பதைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும் என உணவு மற்றும் மருந்து நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தாங்கள் உண்ணும் உணவு அசல் தானா என்பதை உறுதி செய்து கொள்ள முடியும்.

உண்மையான பன்னீர் என்பது முழுக்க முழுக்கப் பாலிலிருந்து மட்டுமே தயாரிக்கப்பட வேண்டும். ஆனால் பல உணவகங்களில் லாபத்திற்காகத் தாவர எண்ணெய் மற்றும் ஸ்டார்ச் கொண்டு தயாரிக்கப்படும் ‘டெய்ரி அனலாக்’ எனும் போலி பன்னீரை அசல் பன்னீர் என்ற பெயரில் வழங்கி வருவது சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. புதிய உத்தரவின்படி, உணவகங்கள் தங்களது மெனு கார்டு, ரசீது மற்றும் மின்னணு திரைகளில் “சீஸ் அல்லது பன்னீர் அனலாக்” என்பதைப் பெரிய எழுத்துக்களில் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். ஊட்டச்சத்து மதிப்புகள் அசல் உணவுகளை விட மாறுபடும் என்பதால் இந்த வெளிப்படைத்தன்மை அவசியமாகிறது.

இந்த விதிகளை மீறும் ஹோட்டல்கள் மற்றும் சப்ளையர்கள் மீது எவ்வித பாரபட்சமும் இன்றி கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு ஆணையர் ஸ்ரீதர் துபே-பாட்டில் எச்சரித்துள்ளார். வாடிக்கையாளர்கள் உணவகங்களில் ஏமாற்றப்பட்டால் அது குறித்து புகார் அளிக்க 1800 222 365 என்ற கட்டணமில்லா எண்ணையும் அரசு அறிவித்துள்ளது. சாப்பிடும் உணவு குறித்த முழு விவரங்களை அறிந்து கொள்வது ஒவ்வொரு குடிமகனின் உரிமை என அரசு தெரிவித்துள்ளது. இந்த அதிரடி மாற்றம் உணவுத்துறையில் பெரும் நேர்மையைக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.