விபத்தில் மூளைச்சாவு: எம்.பி.பி.எஸ். மாணவரின் உடல் உறுப்புகள் தானம் - 6 பேர் மறுவாழ்வு!

 

 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கீழிருப்பு கிராமத்தைச் சேர்ந்த 19 வயது இளைஞர் தேவன், நெல்லையில் உள்ள மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். முதலாமாண்டு படித்து வந்தார். விடுமுறைக்காகச் சொந்த ஊருக்கு வந்திருந்த அவர், பண்ருட்டி நெல்லித்தோப்பு அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது மற்றொரு இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.

படுகாயமடைந்த தேவன், சிகிச்சைக்காகப் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி அவர் மூளைச்சாவு அடைந்ததைத் தொடர்ந்து, அவரது உடல் உறுப்புகளைத் தானம் செய்ய அவரது பெற்றோர் முன்வந்தனர்.

இதையடுத்து தேவனின் இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள் ஆகியவை மாற்று அறுவை சிகிச்சை மூலம் 4 நோயாளிகளுக்குப் பொருத்தப்பட்டன. மேலும், தானமாக வழங்கப்பட்ட கண்கள் மூலம் இரு நபர்களுக்குப் பார்வை கிடைத்தது.மொத்தமாக 6 பேர் மறுவாழ்வு பெற்ற இந்தச் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.