மோதலை தடுக்கச் சென்ற பெண் காவலர்!  இளைஞர் தள்ளியதில்  பரிதாப பலி

 

 

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு தலைமை மருத்துவமனையில் இளைஞர்கள் இடையே ஏற்பட்ட மோதலைத் தடுக்கச் சென்ற பெண் தலைமை காவலர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பரமக்குடி அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக இரு தரப்பைச் சேர்ந்தவர்கள் வந்துள்ளனர். அப்போது அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த பெண் தலைமை காவலர் கண்ணகி (35), இளைஞர்களுக்கு இடையேயான மோதலைத் தடுக்க முயன்றுள்ளார். அப்போது அவரை கருப்புராஜா என்ற இளைஞர் தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது.

இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த கண்ணகிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், காயம் காரணமாக அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.சம்பவத்தைத் தொடர்ந்து அங்கிருந்து தப்பியோடிய இளைஞரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், மருத்துவமனையில் நடந்த மோதலுக்கான காரணம் குறித்தும், சம்பவத்தில் தொடர்புடையவர்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மருத்துவமனை போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் மோதலைத் தடுக்க முயன்ற பெண் காவலர் உயிரிழந்த சம்பவம் போலீசார் மற்றும் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.