மேகமலையில் களமிறங்கும் துணை ராணுவம்... உச்சநீதிமன்றம் கடுமையான உத்தரவு!

 

தேனி மாவட்டம் மேகமலை ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை ஆகஸ்ட் 28-ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பிறப்பித்த கெடு தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் மிகக் கடுமையான உத்தர பிறப்பித்துள்ளனர்.

மேகமலைப் பகுதியில் உள்ள 98 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 6,000 குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில், பாதுகாக்கப்பட்ட புலிகள் காப்பகப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

வழக்கு விசாரணையின் போது, ஆக்கிரமிப்புகளை அகற்றி நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்துவதற்கு கூடுதல் கால அவகாசம் தேவைப்படுவதாகத் தமிழ்நாடு அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

தமிழக அரசின் கோரிக்கையால் அதிருப்தியடைந்த நீதிபதிகள், மேகமலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் எனக் கண்டிப்பான உத்தரவை பிறப்பித்தனர். குறிப்பாக, வனப்பகுதியை ஆக்கிரமித்து பயிரிடப்பட்டுள்ள இலவம்பஞ்சு தோட்டங்களை உடனடியாக அப்புறப்படுத்தி, அந்த நிலங்களை முழுமையாக அரசு கையகப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.

இந்தத் தோட்டங்களில் பணிபுரிய வரும் தொழிலாளர்களே வனப்பகுதியில் தங்கி ஆக்கிரமிப்புகளை ஏற்படுத்துவதாகச் சுட்டிக்காட்டிய நீதிமன்றம், பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புக் கட்டிடங்களை முழுமையாக இடித்து அப்புறப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தது.

நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டால், மேகமலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றத் துணை ராணுவப் படையை அனுப்ப நேரிடும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.