பரந்தூர் விமான நிலைய வழக்கு இன்று விசாரணை!
சென்னை பரந்தூர் விமான நிலைய திட்டத்தைக் கைவிடுவதாக தமிழக அரசு அறிவித்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (நவம்பர் 20) விசாரணைக்கு வருகிறது.
சென்னையைச் சேர்ந்த மென்பொறியாளர் கவுதமன் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதில், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிலவும் இடநெருக்கடியைச் சமாளிக்க ரூ.27 ஆயிரம் கோடி செலவில் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக 1,700 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்த ரூ.680 கோடி அரசு நிதி செலவிடப்பட்டுள்ளதாகவும், இதுவரை 48 சதவீத நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.இந்த நிலையில், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி, கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி சட்டப்பேரவையில் திட்டத்தைக் கைவிடுவதாக முதல்-அமைச்சர் விஜய் அறிவித்தார்.
நிபுணர் குழு அறிக்கைகள், பொருளாதார ஆய்வுகள் இன்றி திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக மனுதாரர் குற்றம்சாட்டியுள்ளார். அரசின் அறிவிப்பை அமல்படுத்தத் தடை விதிக்கவும், ஏற்கெனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களை உரிமையாளர்களிடம் மீண்டும் ஒப்படைக்கத் தடை விதிக்கவும் கோரியுள்ளார்.மேலும், திட்டத்தைக் கைவிடும் முடிவை மறுபரிசீலனை செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தியுள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ளது