பரந்தூர் விமான நிலையத் திட்டம்... அதிகாரிகளுடன் விஜய் ஆலோசனை - என்னவாகப்போகிறது ரூ.27,400 கோடி திட்டம்?
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமையவுள்ள பசுமை வழி விமான நிலையத் திட்டம் தொடர்பாக, தமிழக முதலமைச்சர் விஜய் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் உயர்மட்ட அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். கடந்த ஆண்டு தவெக தலைவராகப் போராட்டக் களத்தில் நின்ற விஜய், இன்று முதலமைச்சர் இருக்கையில் அமர்ந்து எடுக்கும் இந்த முடிவு தமிழக அரசியலில் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
சென்னையின் இரண்டாவது விமான நிலையமாகப் பரந்தூரில் சுமார் 5,746 ஏக்கர் பரப்பளவில், 27,400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த மெகா திட்டம் முந்தைய அரசால் அறிவிக்கப்பட்டது. ஆனால், 13-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்களது விவசாய நிலங்கள், நீர்நிலைகள் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி 900 நாட்களுக்கும் மேலாகப் போராடி வருகின்றனர்.
கடந்த 2025-ம் ஆண்டு ஜனவரி மாதம், தவெக தலைவராகப் பரந்தூர் சென்ற விஜய், போராட்டக் குழுவினரை நேரில் சந்தித்து அவர்களுக்குத் தனது முழு ஆதரவைத் தெரிவித்தார். "விமான நிலையத் திட்டத்திற்கு நான் எதிரானவன் அல்ல; ஆனால் மக்கள் வாழ்வாதாரத்தை அழித்துப் பரந்தூரில் இதை அமைப்பது பொருத்தமானதல்ல" என்று அப்போது அவர் உரக்கப் பேசியிருந்தார்.
தற்போது தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், இத்திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். இதுவரை சுமார் 1,700 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நீர்வழிகள் மற்றும் ஈரநிலங்கள் பாதிக்கப்படாமல் இருக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஹைட்ராலஜிக்கல் அறிக்கைகள் விவாதிக்கப்பட்டன. பரந்தூருக்குப் பதிலாக குறைந்த சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் மாற்று இடங்களைத் தேர்வு செய்வது குறித்தும் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
தேர்தலுக்கு முன்பாக மக்களுக்கு அளித்த வாக்குறுதியின்படி, பரந்தூர் திட்டத்தைப் பொருத்தமான வேறு இடத்திற்கு மாற்றுவாரா அல்லது விவசாயிகளின் நிலங்களைப் பாதிக்காத வகையில் திட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வருவாரா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தொழில்துறை வளர்ச்சிக்கு விமான நிலையம் அவசியம் என்றாலும், 'மக்களின் நலனே முக்கியம்' என்ற கொள்கையுடன் செயல்படும் முதல்வர் விஜய், இந்த விவகாரத்தில் ஒரு சமரசமான மற்றும் ஆக்கப்பூர்வமான முடிவை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அரசின் இறுதி அறிவிப்பு வெளியாகும் எனத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.