பெற்றோர்களே உஷார்... பள்ளி வேனில் கொடூரம்... 1ம் வகுப்புச் சிறுமிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த டிரைவர் கைது!

 

கோவை மாநகரப் பகுதியில் வசித்து வரும் 6 வயதுடைய சிறுமி ஒருவர், அங்குள்ள ஒரு முன்னணித் தனியார் பள்ளியில் 1-ஆம் வகுப்பு படித்து வருகிறார். அந்தச் சிறுமியின் தந்தை ஏற்கனவே இறந்து விட்டதால், குடும்பச் சூழ்நிலை காரணமாக அவளது தாயார் சிறுமியைத் தனது பெற்றோர் வீட்டில் கோவையிலேயே விட்டுவிட்டு, பெங்களூரு நகரில் தங்கி தனியார் வேலை செய்து வருகிறார். இதனால் சிறுமி தனது தாத்தா, பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வந்துள்ளார்.

தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், தனது மகளைப் பார்ப்பதற்காக பெங்களூருவில் இருந்து கோவை வந்த தாயார், தனது மகளை விடுமுறையைக் கழிப்பதற்காகப் பெங்களூருவுக்குத் தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார். அங்குச் சென்ற பிறகு சிறுமி மிகவும் சோர்வாகவும், எப்போதும் ஒருவித பயத்துடனும் இருப்பதை அவளது தாயார் உன்னிப்பாகக் கவனித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த அவர், சிறுமியை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவப் பரிசோதனை செய்த போது, சிறுமியின் உடலில் மறைவான இடங்களில் பலத்த காயங்கள் இருப்பது தெரியவந்தது.

இதனைத் கண்டு அதிர்ச்சியடைந்த தாய், அது குறித்து மகளிடம் மிகவும் நிதானமாக விசாரித்த போது அந்தப் பிஞ்சுச் சிறுமி அழுதுகொண்டே தனக்கு நேர்ந்த கொடூரத்தைக் கூறியுள்ளார். பள்ளி முடிந்ததும் தினமும் தான் முதலாவதாகப் பள்ளி வேனுக்குச் செல்லும் போது, வேன் டிரைவர் தனக்குச் சாக்லெட்டுகளை ஆசையாகக் கொடுத்துத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகச் சிறுமி தெரிவித்துள்ளார். மேலும், இந்த விபரங்களை வெளியே யாரிடமாவது சொன்னால் உன்னைக் கொலை செய்து விடுவேன் என அவர் தன்னை மிரட்டியதாகவும் சிறுமி குமுறியுள்ளார்.

மகளை மிரட்டி வேன் டிரைவர் செய்த இந்த அநாகரிகச் செயலைக் கேட்டுப் பதறிய தாயார், உடனடியாகக் கோவைக்குத் திரும்பி வந்து மாநகரக் கிழக்கு மகளிர் போலிஸ் நிலையத்தில் முறைப்படி புகார் அளித்தார். தாயாரின் இந்த அவசரப் புகாரின் பேரில் போலிஸ் அதிகாரிகள் உடனடியாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து, பள்ளிச் சிறுமிக்குக் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக, அந்தத் தனியார் பள்ளியின் வேன் டிரைவரான 43 வயதுடைய கணேசன் என்பவரைப் போலிஸார் தற்பொழுது போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் தற்பொழுது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பள்ளி வாகனங்களிலேயே குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இல்லாத இந்தச் சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பையும், பெற்றோர்கள் மத்தியில் கடும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.