பெற்றோர்களே உஷார்... கொதிக்கும் சோறு வடிநீரில் தவறி விழுந்த சிறுமி பலி!

 

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே கொதிக்கும் சோறு வடிநீர் பாத்திரத்தில் தவறி விழுந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வெங்கடேஸ்வரலு குடும்பத்தினர், கூடுவாஞ்சேரி அருகே தங்கியிருந்து பூம்பூம் மாடு தொழில் செய்து வந்தனர். இவரது 5 வயது மகள் அவந்திகா, வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று சமையலுக்காக சோறு வடித்துக் கொண்டிருந்த கொதிநீர்ப் பாத்திரத்தில் சிறுமி எதிர்பாராதவிதமாகத் தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதில் சிறுமியின் உடல் முழுவதும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.

இதையடுத்து குடும்பத்தினர் சிறுமியை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி அவந்திகா பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் ஏற்பட்ட இந்த எதிர்பாராத விபத்து அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.