பெற்றோர்களே உஷார்.. லைசென்ஸ் இல்லாமல் உங்க பிள்ளைகள் பைக் ஓட்டினால் 3 ஆண்டு சிறை.. ₹25,000 அபராதம் - தமிழக போலீஸ் அதிரடி எச்சரிக்கை!

 

கோடை விடுமுறை தொடங்கிவிட்ட நிலையில், சிறுவர்கள் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ஓட்டி விபத்துகளை ஏற்படுத்துவதைத் தடுக்கத் தமிழக காவல்துறை அதிரடி சட்ட நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.

மத்திய அரசின் திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, சிறார்கள் வாகனம் ஓட்டினால் அவர்கள் மீது மட்டுமல்லாமல், அவர்களை அனுமதிக்கும் பெற்றோர் அல்லது வாகன உரிமையாளர் மீதே சட்டத்தின் பிடி பாயும்: 18 வயதுக்கு உட்பட்ட சிறார் ஒருவர் வாகனம் ஓட்டிப் பிடிபட்டால், அவரது பெற்றோர் அல்லது வாகன உரிமையாளருக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். சிறை தண்டனையுடன் சேர்த்து ₹25,000 அபராதமும் விதிக்கப்படும்.

சம்பந்தப்பட்ட வாகனத்தின் பதிவுச் சான்றிதழ் (RC) 12 மாதங்களுக்கு (ஒரு வருடம்) ரத்து செய்யப்படும். சட்டம் மீறி வாகனம் ஓட்டும் சிறுவர்களின் எதிர்காலமும் இதனால் பாதிக்கப்படும்: விபத்து ஏற்படுத்தினாலும் அல்லது பிடிபட்டாலும், சம்பந்தப்பட்ட சிறார் 25 வயது அடையும் வரை ஓட்டுநர் உரிமம் பெறத் தகுதியற்றவர் என அறிவிக்கப்படுவார். சிறார்களுக்கு எதிரான குற்றங்கள் 'சிறார் நீதி வாரியத்தின்' (Juvenile Justice Board) மூலம் விசாரிக்கப்படும்.

சென்னையில் மட்டும் கடந்த சில மாதங்களில் சிறார்கள் வாகனம் ஓட்டியதாக நூற்றுக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. "திறமை இருக்கிறது என்பதற்காகப் பிள்ளைகளிடம் வாகனத்தைக் கொடுப்பது அவர்களை ஆபத்தில் தள்ளுவதுடன், உங்களையும் சிறைக்கு அனுப்பும்" எனப் போக்குவரத்துப் போலீசார் எச்சரித்துள்ளனர். குறிப்பாகச் சென்னை அடையாறு பகுதியில் சமீபத்தில் நடைபெற்ற விபத்து ஒன்றில், வாகனத்தை அளித்த நண்பரின் தந்தையே கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.