மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் - பள்ளியை முற்றுகையிட்டுப் பெற்றோர் போராட்டம்!

 

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள தனியார் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படும் புகாரில், அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி சமயபுரம் அருகிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் பயிலும் நான்கு மாணவிகளுக்கு அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மாணவிகள் தங்களுக்கு ஏற்பட்ட இன்னல்கள் குறித்துத் தங்கள் பெற்றோரிடம் கதறி அழுதபடி தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடனடியாகப் பள்ளிக்குத் திரண்டு வந்து முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் குறித்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், பாதிக்கப்பட்ட மாணவிகள், சக ஆசிரியர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையின் அடிப்படையில், மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாகப் புகாருக்குள்ளான தலைமை ஆசிரியர் ஜெயராஜ் என்பரைக் காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்து மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.