பரோட்டா, பிரியாணி பிரியர்கள் அதிர்ச்சி... வணிக சிலிண்டர் விலை உயர்வால் ஹோட்டல்களில் அதிர்ச்சி!
மத்திய அரசு வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை அதிரடியாக 993 ரூபாய் உயர்த்தியுள்ளதால், சென்னையில் உள்ள உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. மேற்காசிய போர் காரணமாக நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டைத் தொடர்ந்து இந்த விலை ஏற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் மாற்றத்தால் ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
விலை உயர்வு காரணமாகச் சென்னையில் உள்ள பெரும்பாலான உணவகங்களில் பிரியாணி விலை 10 ரூபாயும், பரோட்டா விலை 5 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே சிலிண்டர் தட்டுப்பாட்டால் தவித்து வந்த ஹோட்டல் உரிமையாளர்கள், தற்போது உணவுகளின் விலையை 10 சதவீதம் வரை அதிகரித்துள்ளனர். இதனால் வழக்கமாக வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக வேதனை தெரிவிக்கும் உரிமையாளர்கள், அரசின் இந்த நடவடிக்கையால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறுகின்றனர்.
இந்த விலையேற்றம் பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், மத்திய அரசு உடனடியாக சிலிண்டர் விலையைக் குறைக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வால் பாமர மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எரிபொருள் தட்டுப்பாட்டைக் காரணம் காட்டி செய்யப்பட்டுள்ள இந்த உயர்வு, சாமானியர்களின் அன்றாட உணவுத் தேவையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.