இன்று சென்னையில் சிஎஸ்கே மேட்ச் பார்க்க வருபவர்களுக்கு மெட்ரோ ரயிலில் இலவச பயணம்!

 

இன்று மே 18ம் தேதி, திங்கட்கிழமை சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய இரு அணிகளுக்கு இடையே ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது.  இன்றைய  ஆட்டத்தைக் காண மைதானத்திற்கு வரும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் வசதிக்காகச் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கட்டணச் சலுகையை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதன்படி இன்றைய போட்டிக்கான நுழைவுத் டிக்கெட் வைத்திருக்கும் அனைத்து ரசிகர்களும் மெட்ரோ ரயில்களில் இலவசமாகப் பயணம் செய்யலாம் என அறிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, இந்த விளையாட்டுப் போட்டிக்காக ரசிகர்களுக்குப் பிரத்யேகமாக ஸ்பான்சர் செய்யப்பட்ட மெட்ரோ பயணங்களும், இரவில் கூடுதல் நேர மெட்ரோ ரயில் சேவைகளும் விரிவாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ஸ்பான்சர் செய்யப்பட்ட இந்த ஐபிஎல் போட்டிக்கான அசல் பயணச்சீட்டு வைத்திருப்பவர்கள், தங்களது டிக்கெட்டுகளில் அச்சிடப்பட்டுள்ள கியூ-ஆர் குறியீட்டை மெட்ரோ நிலையங்களில் உள்ள தானியங்கி நுழைவு இயந்திரத்தில் எளிதாக ஸ்கேன் செய்து ரயில்களில் தடையின்றிப் பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய போக்குவரத்துச் சலுகையின் கீழ், சென்னையில் உள்ள எந்தவொரு மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்தும் போட்டி நடைபெறும் சேப்பாக்கம் மைதானத்திற்கு மிக அருகில் அமைந்துள்ள அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு இடையே ரசிகர்கள் முற்றிலும் கட்டணமில்லாமல் சென்று வரலாம்.

இன்றைய போட்டித் தொடங்கும் முன்பாகவும் மற்றும் ஆட்டம் நிறைவடைந்த பின்னரும் இந்த வசதி முழுமையாகச் செயல்படும் என்பதால், ஐபிஎல் போட்டியை நேரில் காணச் செல்லும் அனைத்து ரசிகர்களும் இந்தச் சாலை நெரிசலற்ற பாதுகாப்பான வசதியைப் பெருமளவில் பயன்படுத்திக் கொள்ளுமாறு மெட்ரோ அதிகாரிகள் அன்போடு கேட்டுக் கொண்டுள்ளனர்.