அலறியடித்தப் பயணிகள்... நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த அரசுப் பேருந்து!

 

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து திருநெல்வேலி நோக்கி இயக்கப்பட்ட அரசுப் பேருந்து, முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தினால் இன்ஜினிலிருந்து திடீரெனப் புகை வெளியேறி நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்தின்போது பேருந்தில் பயணம் செய்த 50-க்கும் மேற்பட்ட பயணிகள் உடனடியாக அலறியடித்து இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக எந்தவித உயிரிழப்பும் இன்றி உயிர் தப்பினர். திருநெல்வேலி அரசுப் போக்குவரத்துக் கோட்டத்திற்கு உட்பட்ட பல வழித்தடங்களில் தரம் குறைந்த மற்றும் காலாவதியான பழைய பேருந்துகளே இயக்கப்படுவதாகவும், பணிமனைகளில் தினசரி பராமரிப்பு மற்றும் தரமான உதிரிபாகங்கள் வழங்கப்படாததே இதுபோன்ற தொடர் விபத்துகளுக்குக் காரணம் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

பெரிய அளவிலான அசம்பாவிதம் நிகழ்வதற்கு முன்பு போக்குவரத்துத் துறை நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டுத் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.