ரூ.4,500 கோடி ஒப்பந்தத்தில் பொதுக் காப்பீட்டுத் துறையில் தடம் பதிக்கும் பதஞ்சலி நிறுவனம்!
நுகர்வோர் பொருட்கள் மற்றும் ஆயுர்வேத மருந்து விற்பனையில் முன்னணியில் உள்ள பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம், பொதுக் காப்பீட்டுத் துறையில் கால்பதிக்கும் வகையில் மக்மா ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தைக் கையகப்படுத்த ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
மக்மா ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தைக் சுமார் ரூ.4,500 கோடி மதிப்பில் கையகப்படுத்துவதற்குப் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. பிரபல உணவு மற்றும் நுகர்வோர் வர்த்தகக் குழுமமான டி.எஸ் குழுமத்துடன் இணைந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பதஞ்சலி ஆயுர்வேதம் 73.56% பங்குகள், டி.எஸ் குழுமம் 24.5% பங்குகள். ஆதார் பூனாவாலா குழுமத்தைச் சேர்ந்த சனோட்டி பிராப்பர்ட்டீஸ் மற்றும் இதர பங்குதாரர்களிடம் இருந்து இந்தப் பங்குகள் பெறப்படுகின்றன.
மேக்மா இன்சூரன்ஸ் நிறுவனத்தைப் பதஞ்சலி மற்றும் டி.எஸ் குழுமம் கையகப்படுத்துவதற்கு இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் அதிகாரப்பூர்வ ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்புதல் ஜூலை 28 முதல் மூன்று மாதங்களுக்கு செல்லுபடியாகும் என்பதால், அதற்குள் பணப் பரிவர்த்தனைகள் மற்றும் முறையான பங்கு மாற்ற நடைமுறைகளை முடிக்குமாறு IRDAI உத்தரவிட்டுள்ளது.
சமீபத்திய ஆண்டுகளில் சீரான வளர்ச்சியைப் பதிவு செய்து வரும் மக்மா இன்சூரன்ஸ் நிறுவனம், கடந்த நிதியாண்டில் ரூ.3,334.4 கோடி மொத்த பிரீமியம் ஈட்டியிருந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் அது ரூ.3,615.48 கோடியாக உயர்ந்துள்ளது.
ஆட்டோமொபைல், ஆரோக்கியம், சொத்து மற்றும் வணிகக் காப்பீட்டுப் பிரிவுகளில் இயங்கி வரும் இந்நிறுவனத்தைக் கையகப்படுத்துவதன் மூலம், நாட்டின் வேகமாக வளர்ந்து வரும் பொதுக் காப்பீட்டு சந்தையில் பதஞ்சலி பிரதான நிறுவனங்களில் ஒன்றாக உருவெடுக்கவுள்ளது.