பட்டப்பகலில் துணிகரம்...  பாட்டியைக் கீழே தள்ளிவிட்டு 4 வயதுக் குழந்தை காரில் கடத்தல்! 

 

சென்னை மாநகரின் மிக முக்கியப் பரபரப்பான குடியிருப்புப் பகுதியான வேளச்சேரியில், இன்று மதியம் ஒட்டுமொத்தத் தலைநகரையே அதிர வைக்கும் ஒரு படுபயங்கரக் கடத்தல் சம்பவம் அரங்கேறியுள்ளது. வேளச்சேரி ஏ.ஜி.எஸ். காலனி பகுதியைச் சேர்ந்த சாந்தி என்ற பெண்மணி, தனது 4 வயதுப் பேத்தியை  தோளில் தூக்கிக்கொண்டு வீட்டின் அருகே உள்ள ஒரு பொதுச்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அந்தப் பகுதிக்கு வேகமாக வந்த அடையாளம் தெரியாத ஒரு சொகுசுக் கார், சாந்தியை வழிமறித்துத் திடீரென நின்றது. காரில் இருந்து மின்னல் வேகத்தில் இறங்கிய முகமூடி அணிந்த மர்மநபர்கள், அந்தப் பெண்ணைக் கீழே தள்ளிவிட்டு, அவர் கையில் இருந்த 4 வயதுப் பிஞ்சுக் குழந்தையைப் பறித்துக் கொண்டு, கண் இமைக்கும் நேரத்திற்குள் காரில் ஏற்றி   தப்பிச் சென்றனர். பட்டப்பகலில் அரங்கேறிய இந்தத் துணிகரக் கடத்தல் சம்பவம் அந்தப் பகுதி மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

கொடூரக் கடத்தல் குறித்துக் குழந்தையை இழந்த பாட்டி சாந்தி,  கண்ணீர் மல்க அருகில் உள்ள காவல் நிலையத்தில் அவசரப் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில்  உடனடியாக  களமிறங்கிய ஆதம்பாக்கம் போலீசார், கடத்தல் கும்பல் மீது வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்துத் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். மேலும், கடத்தல்காரர்கள் தப்பிச் சென்ற பாதையைத் துல்லியமாகக் கண்டறிய, சம்பவம் நடந்த ஏ.ஜி.எஸ். காலனி தெருக்களில் உள்ள அனைத்து சிசிடிவி (CCTV) கேமரா காட்சிகளையும்  அக்குவேறு ஆணிவேறாக ஆய்வு செய்து வருகின்றனர்.