பவன் கல்யாணுக்கு திடீர் அறுவை சிகிச்சை: ரசிகர்கள் அதிர்ச்சி!
திரையுலகின் 'பவர் ஸ்டார்' மற்றும் ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம், அவரது தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. நேற்று நடைபெற்ற அதிகாரப்பூர்வ ஆலோசனைக் கூட்டத்தின் போது, அவருக்குத் திடீரென உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அனைத்து நிகழ்ச்சிகளும் அதிரடியாக ரத்து செய்யப்பட்டன.
மருத்துவர்களின் அவசர ஆலோசனையின் பேரில், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு எம்.ஆர்.ஐ ஸ்கேன் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில், இன்று மாலை அவருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து முடிக்கப்பட்டது. தற்போது அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார்.
அறுவை சிகிச்சைக்குப் பின் பவன் கல்யாண் குறைந்தது ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை முழுமையான ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அவர் முழு உடல்நலத்தைப் பெற இன்னும் சில காலம் பிடிக்கும் என்பதால், அதுவரை கட்சிப் பணிகள் மற்றும் படப்பிடிப்புகளில் அவர் பங்கேற்க மாட்டார் எனத் தெரிகிறது. அவர் விரைவில் குணமடைய வேண்டி ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் ரசிகர்கள் சிறப்புப் பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.