பவன் கல்யாணுக்கு கடுமையான முகுது வலி? அமைச்சரவை கூட்டத்தில் பாதியில் சென்றதால் தொண்டர்கள் அதிர்ச்சி!  

 

ஆந்திர மாநிலம் அமராவதியில் நேற்று காலை அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஆந்திர மாநில துணை முதல்வரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் சக அமைச்சர்களுடன் கலந்து கொண்டார். மாநிலத்தின் முக்கிய முடிவுகள் மற்றும் திட்டங்கள் குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டு வந்தது.

கூட்டம் நடந்து கொண்டிருந்த போது பவன் கல்யாணுக்கு திடீரென கடுமையான முதுகுவலி மற்றும் அதீத சோர்வு ஏற்பட்டது. இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர் கூட்டத்தின் பாதியிலேயே அரங்கில் இருந்து அவசரமாக வெளியேறினார். அவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் ஐதராபாத்தில் எண்டோஸ்கோபிக் சைனஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு தொடர்ந்து ஓய்வில்லாமல் மக்கள் பணிகளில் ஈடுபட்டு வந்ததால் அவர் மீண்டும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். பவன் கல்யாண் பாதியிலேயே வெளியேறிய செய்தி அவரது தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மருத்துவர்களின் ஆலோசனைப்படி அவர் வீட்டில் ஓய்வெடுத்து வருவதாக அவரது கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.