பயனர்களே உஷார்... பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கியின் உரிமம் ரத்து!
நொய்டாவை தலைமையிடமாக கொண்டு 2017 முதல் செயல்பட்டு வந்த பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கியின் உரிமத்தை இந்திய ரிசர்வ் வங்கி தற்போது அதிரடியாக ரத்து செய்துள்ளது. வங்கி ஒழுங்குமுறைச் சட்டத்தின் விதிகளை இந்த வங்கி தொடர்ந்து மீறி வந்ததாகவும், அதன் நிர்வாக நடைமுறைகள் திருப்திகரமாக இல்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பொதுமக்களின் நலனுக்கும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்புக்கும் பாதகமான சூழல் நிலவுவதால் இந்த கடுமையான முடிவை எடுத்துள்ளதாக ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.
கடந்த 2024 தொடக்கத்திலேயே புதிய டெபாசிட்டுகள் மற்றும் வாலட் பரிவர்த்தனைகளுக்குத் தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது உரிமம் முழுமையாக பறிக்கப்பட்டுள்ளது. வங்கியின் மேலாண்மை குறைபாடுகள் மற்றும் விதிகளை மதிக்காத போக்கு காரணமாக இதனைத் தொடர்ந்து செயல்பட அனுமதிப்பது சரியாக இருக்காது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வங்கியைக் கலைப்பதற்கான சட்டப்பூர்வ மனுவை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய இருப்பதாகவும் ரிசர்வ் வங்கி தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
வங்கி கலைக்கப்பட்டாலும் வாடிக்கையாளர்களின் வைப்புத்தொகையைத் திருப்பிச் செலுத்துவதற்குத் தேவையான பணப்புழக்கம் அந்த வங்கியிடம் இருப்பதாக ரிசர்வ் வங்கி உறுதி அளித்துள்ளது. முன்னதாக வழங்கப்பட்ட பல கட்டுப்பாடுகள் வங்கியின் வளர்ச்சியை முடக்கியிருந்த நிலையில், இந்த இறுதி நடவடிக்கை அந்நிறுவனத்திற்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. நாட்டின் நிதித்துறையில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவே இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.