மாதம் ரூ.3,000 ஓய்வூதியம்.. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான பிரதமரின் ‘ஷ்ரம் யோகி மாந்தன்' திட்டம்!
தமிழ்நாட்டில் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்களின் எதிர்காலப் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், மத்திய அரசின் 'பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மாந்தன்' ஓய்வூதியத் திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் சேரும் பயனாளிகளுக்கு அவர்களின் 60 வயதிற்குப் பிறகு, மாதந்தோறும் உறுதியான ரூ.3,000 ஓய்வூதியமாக வழங்கப்படும். 18 முதல் 40 வயதுக்குட்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள் இத்திட்டத்தில் சேரத் தகுதியுடையவர்கள்.
சுற்றுலா வழிகாட்டிகள், தெருவோர வியாபாரிகள், தூய்மைப் பணியாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், சுமை தூக்குபவர்கள் மற்றும் கைவினைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த தொழிலாளர்கள் இதில் இணையலாம்.
ஆதார் அட்டை (அடையாளச் சான்று), வங்கி சேமிப்புக் கணக்கு புத்தகம் மற்றும் செல்போன் எண் ஆகியவை தேவைப்படும். தகுதியுடைய நபர்கள் தங்களுக்கு அருகில் உள்ள அரசு பொதுச் சேவை மையங்களை அணுகி உடனடியாக இத்திட்டத்தில் பதிவு செய்து பயனடையலாம்.