சுட்டெரிக்கும் கோடை வெயில்... ஊரடங்கு போல வீட்டிற்குள் இருக்க மக்களுக்கு அறிவுறுத்தல்!
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்து வருகிறது. மாநிலத்தின் பல மாவட்டங்களில் வெப்பநிலை 38 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அதீத வெப்பம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால் அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
குறிப்பாக பகல் நேரங்களில் ஊரடங்கு போன்ற கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகள் இன்றி யாரும் வெளியே வரவேண்டாம் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது. முக்கியமாக காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருக்கும் என்பதால் அந்த நேரங்களில் பயணங்களை முற்றிலும் தவிர்க்குமாறு சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
வெப்ப அலைகளால் உடல்நலக் குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் போதிய அளவு தண்ணீர் குடிக்கவும், பருத்தி ஆடைகளை அணியவும் மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர். வேலை நிமித்தமாக வெளியே செல்பவர்கள் குடை அல்லது தொப்பி அணிந்து செல்வதை உறுதி செய்ய வேண்டும். இந்த அசாதாரண சூழலை எதிர்கொள்ள அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் தயார் நிலையில் இருக்குமாறு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.