"அமைச்சர்களைவிட மக்கள்தான் முக்கியம்" – முதலமைச்சர் விஜய் கடும் எச்சரிக்கை!
தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மிகக் கடுமையான அறிவுறுத்தல்களையும் எச்சரிக்கைகளையும் விடுத்துள்ளார்.
அமைச்சரவைக் கூட்டத்தில் த.வெ.க. அரசின் செயல்பாடுகள் மற்றும் மக்கள் நலத் திட்டங்கள் குறித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், மக்கள் நலனே இந்த அரசின் முதன்மை இலக்கு என்பதைத் திட்டவட்டமாக உணர்த்தினார். "நமக்கு அமைச்சர்களைவிட மக்கள்தான் மிக முக்கியம். மக்கள் நம்மீது வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பதற்காகவே நாம் இந்த ஆட்சிப் பொறுப்பிற்கு வந்துள்ளோம் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது."
தொடர்ந்து பேசிய முதலமைச்சர், வெறும் மேடைப் பேச்சுகளோடு தங்களது கடமை முடிந்துவிடுவதில்லை என்பதை அமைச்சர்களுக்குத் தெளிவுபடுத்தினார். தேர்தல் மேடைகளில் மக்களுக்கு நாம் கொடுத்த வாக்குறுதிகளை வெறும் பேச்சோடு நிறுத்திக் கொள்ளாமல், சொன்னதை முழுமையாகச் செயல்படுத்திக் காட்ட வேண்டும்.
பொதுமக்களுக்கு அரசுத் துறைகள் மூலம் கிடைக்க வேண்டிய அத்தியாவசியச் சேவைகள் அனைத்தும் எவ்வித லஞ்சமும் இன்றி, தடையின்றிச் சென்றடைவதை அந்தந்தத் துறை அமைச்சர்கள் தனிப்பட்ட முறையில் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும். அரசு நிர்வாகத்தில் எவ்வித முறைகேடுகளுக்கும் சமரசம் செய்துகொள்ளப் போவதில்லை என்று எச்சரித்த முதலமைச்சர் விஜய், நமது அரசு முழுமையான ஊழலற்ற, வெளிப்படையான ஒரு 'Clean Government' ஆகச் செயல்பட வேண்டும் என்று அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டார்.