மக்களே உஷார்... பட்டாசு வாங்கித் தருவதாகக் கூறி 3 சிறுவர்களை கடத்திச் சென்று சித்ரவதை - காசிமேட்டில் கொடூரம்!

 

சென்னையில் தீபாவளிக்கு இலவசமாகப் பட்டாசு மற்றும் வாட்ச் வாங்கித் தருவதாக ஆசைவார்த்தை கூறி, 3 சிறுவர்களைத் தனி அறையில் அடைத்து வைத்துச் சிகரெட்டால் சூடு வைத்துச் சித்ரவதை செய்த 38 வயது நபரைச் காசிமேடு போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்த 12 வயதுடைய 3 சிறுவர்கள், நேற்று முன்தினம் காலை தங்களது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது திடீரெனக் காணாமல் போனார்கள். சிறுவர்களைக் காணாமல் பதற்றமடைந்த குடும்பத்தினர் அப்பகுதியில் தீவிரமாகத் தேடியபோது, அதே பகுதியைச் சேர்ந்த விக்ரம் (38) என்பவர், "தீபாவளிக்குப் பட்டாசு மற்றும் புதிய வாட்ச் வாங்கித் தருகிறேன்" என ஆசைவார்த்தை கூறி 3 பேரையும் அழைத்துச் சென்றது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து குடும்பத்தினர் விக்ரமின் செல்போனைத் தொடர்பு கொண்டு விசாரித்த போது, அவர் 3 சிறுவர்களையும் ராயபுரம் பகுதியில் ஆட்டோவில் இறக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதையடுத்துச் சிறுவர்களை மீட்ட பெற்றோர், அவர்களிடம் என்ன நடந்தது என்று விசாரித்த போது வெளியான தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

விக்ரம் தங்களைச் சென்னை சென்ட்ரல் பகுதியில் உள்ள ஒரு தனி அறைக்கு அழைத்துச் சென்று பூட்டி வைத்ததாகவும், அங்குத் தன்னைக் குளிப்பாட்டி மசாஜ் செய்யுமாறு கட்டாயப்படுத்தியதாகவும் சிறுவர்கள் கூறினர்.

மேலும் வலுக்கட்டாயமாக தங்களது வாயில் மது ஊற்றியதாகவும், சிகரெட்டைப் புகைக்கச் சொல்லி வற்புறுத்தியதாகவும் தெரிவித்தனர். சிகரெட் புகைக்க மறுத்த சிறுவர்களின் உடலில் சிகரெட்டால் சூடு வைத்து கொடூரமாகச் சித்ரவதை செய்துள்ளார். சிறுவர்கள் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக காசிமேடு காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தி, காசிமேடு பகுதியில் பதுங்கியிருந்த விக்ரமை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட விக்ரமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காசிமேடு போலீசார், அவரை புழல் மத்திய சிறையில் அடைத்தனர். தீபாவளிப் பண்டிகைக் காலத்தில் சிறுவர்களுக்கு ஆசைவார்த்தை கூறி நடந்த இக்கொடூரச் சம்பவம் காசிமேடு பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.