மக்களே உஷார்... தீபாவளி விற்பனையில் 35,000 கிலோ போலி நெய் பறிமுதல்... நாடு முழுவதும் அதிர்ச்சி!
தீபாவளிப் பண்டிகையைக் குறி வைத்து சந்தையில் விற்பனை செய்யப்படவிருந்த 35,000 கிலோ போலி நெய்யை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் சோமு பகுதியில், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டுப் பலகாரங்கள் மற்றும் பால் பொருட்கள் விற்பனையில் கலப்படத்தைத் தடுக்கும் வகையில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த ஆய்வின் போது, சந்தையில் முன்னணி பிராண்டுகளாக விளங்கும் பிரபல நிறுவனங்களின் பெயர்கள் மற்றும் லேபிள்களைப் பயன்படுத்தி, தரமற்ற மற்றும் வேதிப்பொருட்கள் கலந்த போலி நெய் தயாரிக்கப்பட்டுப் பேக் செய்யப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பண்டிகைக் காலத்தில் மாநிலம் முழுவதிலும் உள்ள உணவுப் பண்டங்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட இருந்த சுமார் 35,000 கிலோ போலி நெய்யை அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே பறிமுதல் செய்து சீல் வைத்தனர்.
போலி நெய் தயாரிப்பில் ஈடுபட்ட நபர்கள் மீது உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பண்டிகைக் காலத்தில் பொதுமக்கள் கலப்பட உணவுகள் மற்றும் போலியான பிராண்டுகளை வாங்கி ஏமாற வேண்டாம் எனவும், விழிப்புணர்வுடன் இருக்குமாறும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.