கதறும் மக்கள்... 50 மாவட்டங்களும் பேரிடர் மண்டலங்களாக அறிவிப்பு - கனமழையால் வெள்ளக்காடாக மாறிய பாங்காக்!
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் பெய்து வரும் வரலாறு காணாத கனமழை மற்றும் கடுமையான வெள்ளப்பெருக்கு காரணமாக, நகரின் அனைத்து மாவட்டங்களும் பேரிடர் மண்டலங்களாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
பாங்காக்கில் கடந்த 24-ஆம் தேதி முதல் பெய்து வரும் தொடர் மழையால் நகரின் 50 மாவட்டங்களும் முழுமையாக வெள்ளப் பேரிடர் மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. பல பகுதிகளில் 300 மி.மீ.-க்கும் அதிகமான மழை கொட்டித் தீர்த்துள்ளது.
பிரதான வடிகால்கள் நிரம்பி வழிவதுடன், சாலைகளில் இடுப்பளவு தண்ணீர் தேங்கியுள்ளதால் 13-க்கும் மேற்பட்ட முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் நீரில் மூழ்கிப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்து முழுவதும் சுமார் 84,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாங்காக் நகரில் மட்டும் 52,000 குடும்பங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டு, 4,900-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுத் தற்காலிக நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகளுக்காக 10,000-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
நூற்றுக்கணக்கான பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதோடு, ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.டான் முயோங் விமான நிலையங்களுக்குச் செல்லும் பயணிகள் கூடுதல் நேரத்தை ஒதுக்கி முன்கூட்டியே புறப்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.