கதறும் மக்கள்: ரூ.1,000 கோடி மோசடி... மதுரையில் சதுரங்க வேட்டை... போலி செயலி மூலம் அரங்கேறிய மோசடி!
மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் போலி செயலிகள் மூலம் முதலீட்டுப் பணத்தை இரட்டிப்பாகத் தருவதாகக் கூறி சுமார் ரூ.1,000 கோடி வரை மாபெரும் மோசடி அரங்கேறியுள்ளது காவல்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கைவரிசை: மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மேலூர், கீழவளவு, மேலவளவு மற்றும் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 'FQL Exchange' மற்றும் 'VG Investment' ஆகிய போலி செயலிகள் இயக்கப்பட்டன. இந்தச் செயலிகள் மூலம் முதலீடு செய்யும் பணத்திற்கு இரண்டே மாதங்களில் இரட்டிப்பு லாபம் தருவதாக ஆசை வார்த்தை கூறி இந்த மோசடி நடத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக நத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த மோசடியில் சிக்கி ஏமாற்றப்பட்டுள்ளனர். தனி நபர்கள் பலரும் ஆசைப்பட்டு ரூ.50,000 முதல் ரூ.20 லட்சம் வரை இதில் முதலீடு செய்துள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலரும் ஒருவருக்கொருவர் தெரியாமல் பணம் முதலீடு செய்து ஏமாந்துள்ள விவரம் மோசடி வெளிச்சத்திற்கு வந்த பின்னரே தெரியவந்துள்ளது.
ஒரே நாளில் 22,000 பேர் காவல் நிலையத்தில் புகார் மனுக்களை அளித்துள்ளதால் மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டக் காவல்துறை திணறி வருகிறது. தற்போது மூன்றாவது நாளாகப் புகார்கள் பெறப்பட்டு வரும் நிலையில், நத்தம் காசம்பட்டியைச் சேர்ந்த 2 முகவர்கள் மற்றும் மேலூர் பகுதியைச் சேர்ந்த உறவினர்கள் என இதுவரை 3 முகவர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த பிரம்மாண்ட மோசடிக்கு மூளையாகச் செயல்பட்ட முக்கியக் குற்றவாளிகளைக் கண்டறியக் காவல்துறையினர் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.