அதிகாலையிலேயே மீன் வாங்க குவிந்த மக்கள் - களைகட்டிய துறைமுகங்கள்!
புரட்டாசி மாதத்தின் 3-வது சனிக்கிழமை வழிபாடுகள் நிறைவடைந்ததை அடுத்து, கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் இன்று அதிகாலை முதலே பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மீன்களை வாங்குவதற்காகத் திரண்டனர்.
நேற்று வரை புரட்டாசி மாத வழிபாடுகள் காரணமாக அசைவ உணவுகளைத் தவிர்த்து வந்த பொதுமக்கள், இன்று அதிகாலை முதலே கடலூர் துறைமுகத்தில் குவிந்தனர். இதனால் அங்கு கடுமையான கூட்ட நெரிசல் காணப்பட்டது.
துறைமுகத்தில் இன்று அதிக அளவில் மீன்கள் விற்பனைக்கு வந்திருந்ததால், பொதுமக்களும் வியாபாரிகளும் போட்டிப்போட்டு மீன்களை வாங்கிச் சென்றனர்.
துறைமுகத்தில் விற்பனை செய்யப்பட்ட மீன்களின் விலைப் பட்டியலின்படி, வஞ்சரம் மீன் கிலோ ரூ.700 முதல் ரூ.900 வரையிலும், வவ்வால் மீன் ரூ.700-க்கும், இறால் ரூ.250-க்கும், சங்கரா மீன் ரூ.350-க்கும் விற்பனை செய்யப்பட்டன. புரட்டாசி மாத வழிபாடுகள் நிறைவுபெற்றதைத் தொடர்ந்து, மீன் சந்தை களைகட்டியுள்ளதால் மீனவர்களும் வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.