புதுக்கோட்டையில் போதை மாத்திரை கலந்த கள் குடித்தவர்களுக்கு உடல்நல குறைவு!

 

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு காவல் சரகத்திற்குட்பட்ட மேலப்புள்ளான்விடுதி பகுதியில் கள் குடித்தவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகப் பரவிய செய்தியைத் தொடர்ந்து காவல்துறை விசாரணை நடத்தியதில், போதை மாத்திரை கலந்த கள் குடித்ததால் 40 பேருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.  

போலீசாரின் தொடர் விசாரணையில் 9 நபர்கள் மட்டுமே போதை மாத்திரைக் கலந்த கள் குடித்ததால் உடல்நலக் குறைவு ஏற்பட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சையில் உள்ள 9 நபர்களும் தற்போது நல்ல நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் மற்றும் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளனர். அனுமதியின்றி சட்டவிரோதமாகக் கள் விற்பனை செய்தது தொடர்பாக வடகாடு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக 3 நபர்கள் மீது வழக்குப் பதியப்பட்டு, அதில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒருவரைத் தேடும் பணி மற்றும் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. "சமூக வலைதளங்களில் 40 பேருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாகப் பரப்பப்படும் செய்தி முற்றிலும் தவறானது. பொதுமக்கள் இத்தகைய வதந்திகளை நம்ப வேண்டாம்," என்று புதுக்கோட்டை காவல்துறை தனது செய்திக் குறிப்பில் கேட்டுக் கொண்டுள்ளது.