முண்டியடித்த மக்கள்... மதுரை கும்பாபிஷேக விழாவில் கூட்டநெரிசல், தள்ளுமுள்ளு - பக்தர்கள் காயம்!

 

வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று கோலாகலமாக நடைபெற்று வரும் மகா குடமுழுக்கு விழாவில், எதிர்பாராத விதமாக ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் தள்ளுமுள்ளு காரணமாகப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடைபெறும் குடமுழுக்கு விழாவைக் காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வெளிமாநிலங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மதுரையில் குவிந்துள்ளனர்.

விழா பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில், சிறப்பு அனுமதிச் சீட்டு வைத்துள்ளவர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று காவல்துறையினர் முன்கூட்டியே அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தனர். இருப்பினும், காவல்துறையின் கட்டுப்பாடுகளை மீறி ஏராளமான பக்தர்கள் கோவிலுக்குள் நுழைவதற்கு முயன்றனர். அப்போது ஏற்பட்ட திடீர் தள்ளுமுள்ளு காரணமாக அங்கிருந்த இரும்புத் தடுப்புகள் தகர்க்கப்பட்டு, பக்தர்கள் முண்டியடித்துக்கொண்டு உள்ளே ஓடினர்.

இந்த எதிர்பாராத கூட்ட நெரிசலில் சிக்கி அங்கிருந்த சில பக்தர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. உடனடியாக மீட்புப் பணியாளர்களும் காவல்துறையினரும் விரைந்து செயல்பட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்தச் சம்பவத்தால் குடமுழுக்கு விழாவின் போது சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.