கதறும் மக்கள்.. வதைக்கும் வெப்ப அலை... ஜெர்மனியில் 15,800 பேர் உயிரிழப்பு!
ஜெர்மனியில் வீசிய கோர வெப்ப அலைகளின் (Heatwaves) காரணமாக இதுவரை இல்லாத அளவாக சுமார் 15,800 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜெர்மனியின் பொதுச் சுகாதார நிறுவனமான ராபர்ட் கோச் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஜெர்மனி வரலாற்றிலேயே ஒரே கோடைக்காலத்தில் பதிவான மிக அதிகபட்ச வெப்ப அலை உயிரிழப்பு இதுவாகும்.
கடந்த மே முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் வெப்பநிலை இயல்பு நிலையை விடக் கடுமையாக உயர்ந்ததால், தட்பவெப்பநிலை சமநிலையின்மை, இதய நோய் பாதிப்புகள், நீர்ச்சத்து குறைபாடு மற்றும் சுவாசப் பிரச்சினைகள் ஏற்பட்டு முதியவர்கள் மற்றும் நோயாளிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் பல முக்கிய நகரங்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டியதுடன், இரவிலும் வெப்பம் குறையாததால் மனித உடல் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியாமல் போனது. மேலும், பல வீடுகள் மற்றும் மருத்துவமனைகளில் போதிய குளிர்சாதன வசதிகள் இல்லாததும் உயிரிழப்பு அதிகரிக்கக் காரணமாக அமைந்தது.
காலநிலை மாற்றத்தின் தீவிர விளைவுகளே ஐரோப்பாவில் இத்தகைய பேரழிவுகளுக்குக் காரணம் எனச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். இதனையடுத்து, ஜெர்மன் அரசு அவசரகாலத் தேசிய வெப்பப் பாதுகாப்புத் திட்டங்களை தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.