தனது மகனை அங்கன்வாடி மையத்தில் சேர்த்த பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஷரண்யா அறி!

 

அரசுப் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களின் தரம் குறித்துப் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஷரண்யா அறி, தனது 2 வயது மகனை அரசு அங்கன்வாடி மையத்தில் சேர்த்துத் தமிழக அளவில்  முன்னுதாரணமாகத் திகழ்ந்துள்ளார். இவரது இந்தச் செயலுக்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

கடந்த மாதம் பெரம்பலூர் மாவட்டம், எசனை ஊராட்சியில் உள்ள அரசு அங்கன்வாடி மையத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஷரண்யா அறி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த மையத்தின்  செயல்பாடுகள், குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவுகள் மற்றும் தூய்மையான சூழலைக் கண்டு அவர் பெரிதும் பாராட்டினார்.

அந்த ஆய்வின்போதே, அரசு அங்கன்வாடி மையங்களின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் வகையில், தனது சொந்தக் குழந்தையையும் அரசு அங்கன்வாடி மையத்திலேயே சேர்க்கப் போவதாக அங்கிருந்த ஊழியர்களிடம் அவர்  உறுதியளித்தார். தான் கொடுத்த வாக்கின்படி, ஆட்சியர் ஷரண்யா அறி தனது 2-வது மகனான 2 வயது நிரம்பிய சிறுவன் ஆத்விக்கை, நொச்சியம் ஊராட்சிக்குட்பட்ட விளாமுத்தூர் அரசு அங்கன்வாடி மையத்தில் சேர்த்துள்ளார்.

இன்று தனது உத்தியோகபூர்வ பணி நிமித்தமாக விளாமுத்தூர் பகுதிக்கு ஆய்வுக்குச் சென்ற மாவட்ட ஆட்சியர் ஷரண்யா அறி, அங்குள்ள அங்கன்வாடி மையத்திற்கும் நேரில் சென்றார். அங்கு மற்றக் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த தனது மகன் ஆத்விக்கை அன்போடு பார்த்ததுடன், அவனது தினசரிச் செயல்பாடுகள், உணவு உட்கொள்ளும் முறை மற்றும் ஆரோக்கிய நிலை குறித்து அங்கன்வாடி ஊழியர்களிடம் ஒரு சாதாரணத் தாயாகக் கேட்டறிந்தார். உயர் பதவியில் இருந்தாலும் அரசு மையங்களின் மீது நம்பிக்கை வைத்து இந்தச் சமூக மாற்றத்திற்கு வித்திட்டுள்ள ஆட்சியரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.