பெரம்பலூர் டீக்கடை கேஸ் சிலிண்டர் வெடிப்பு விபத்து: பலி எண்ணிக்கை 6-ஆக உயர்வு!

 

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள டீக்கடையில் ஏற்பட்ட பயங்கர கேஸ் சிலிண்டர் வெடிப்பு விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், பலியானோரின் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளது.

பெரம்பலூர் காமராஜர் வளைவு பகுதியில் அருணாசலம் என்பவருக்குச் சொந்தமான டீக்கடையில் கடந்த ஆகஸ்ட் 11-ஆம் தேதி திடீரென கேஸ் சிலிண்டர் கசிவு ஏற்பட்டு பயங்கர தீ விபத்து உருவானது.

சிலிண்டர் வெடித்துச் சிதறியதில் சுமார் 10 மீட்டர் தூரத்திற்குத் தீ ஜுவாலை பரவி, அப்பகுதியில் நின்றிருந்த பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் பலர் மீது பட்டுப் பலத்த காயங்களை ஏற்படுத்தியது. விபத்தில் படுகாயமடைந்தவர்களில் ஏற்கனவே 5 பேர் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்திருந்தனர்.

திருச்சி தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பெரம்பலூர் மாவட்டம் களரம்பட்டியைச் சேர்ந்த விஜயகுமார் (47) என்பவர் ஆகஸ்ட் 20 காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் இந்தச் சோகச் சம்பவத்தில் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 6-ஆக உயர்ந்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.