பெரும் பரபரப்பு...  பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேசில் தலை இல்லாத ஆண் சடலம் !   

 

சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தின் 4வது பிளாட்பாரத்தில் நீண்ட நேரமாக ஒரு சூட்கேஸ் கேட்பாரற்று கிடந்தது. இதனைப் பார்த்து சந்தேகமடைந்த பயணிகள் உடனடியாக ரயில்வே காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் அந்தப் பெட்டியைத் திறந்து பார்த்த போது, அதற்குள் தலை இல்லாத நிலையில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இந்தக் கொடூரச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும் ரயில்வே காவல் துறை கண்காணிப்பாளர் (எஸ்.பி.) உடனடியாக பெரம்பூர் ரயில் நிலையத்திற்கு வந்து நேரில் ஆய்வு நடத்தினார். எப்போதும் மக்கள் நடமாட்டத்துடன் பரபரப்பாகக் காணப்படும் இந்த ரயில் நிலையத்தில், பெட்டிக்குள் தலை இல்லாத சடலம் கண்டெடுக்கப்பட்ட விவகாரம் சென்னை மக்களிடையே பெரும் பயத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

யாரோ மர்ம நபர்கள் அந்த நபரை வேறொரு இடத்தில் வைத்துத் துண்டு துண்டாகக் கொலை செய்துவிட்டு, உடலை மட்டும் சூட்கேசில் அடைத்து இங்கு கொண்டு வந்து போட்டுச் சென்றுள்ளனர். இந்தத் துணிச்சலான கொலையைச் செய்த மர்ம நபர்களைப் பிடிப்பதற்காகக் காவல் துறையினர் தனிப்படைகள் அமைத்து, ரயில் நிலைய கண்காணிப்புக் கேமரா பதிவுகளைக் கொண்டு தீவிரமாகத் தேடி வருகின்றனர்.