பெரியார் ஓர் சகாப்தம் - பொம்மை மனிதர்களிடையே வாழ்ந்த நிஜ ஆளுமை!

 

இன்று திராவிட கட்சிகளால் தந்தை பெரியாரின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. தலைமுறைகளைத் தாண்டி தமிழகத்தில் கோலோச்சும் திராவிட கட்சிகளின் முன்னோடி தந்தை பெரியார் தான் என்றால் மிகையில்லை. 

ஈரோடு மாவட்டத்தில் பெரும் செல்வச் செழிப்பு வாய்ந்த வணிகர்கள் வெங்கடப்ப நாயக்கர் – சின்னத்தாயம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு 1879, செப்டம்பர் 17ம் தேதி தந்தை பெரியார் மகனாக பிறந்தார். செல்வம் கரை புரண்டிருந்த காலத்திலும் சாதிப்பாகுப்பாட்டில் சமூக நீதியை தேடியதால் பெரியார் பட்ட காயங்களும், அவமானங்களும் மிக மிக அதிகம்.

தந்தை பெரியாரின் கொள்கைகளுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அறிஞர் அண்ணா 1967ல் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்ததும் ‘இந்த ஆட்சியே தந்தை பெரியாருக்கு காணிக்கை’ எனத் தெரிவித்தார். அவர் ஆட்சியில் சுயமரியாதை திருமணங்கள், கலப்பு திருமணங்களை ஊக்கப்படுத்தினார். அவருக்கு பிறகு அவருடைய வழியில் தமிழகத்தின் அடுத்த முதல்வராக அமர்ந்த கருணாநிதியும் அடித்தள மக்கள் ஏற்றம் பெற்றிடும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தினார் என்பதை தமிழகம் நன்கு அறியும்.

அவருடைய இளம் வயதிலேயே காந்தி மீது ஈடுபாடு கொண்டு காங்கிரசில் இணைந்தார். இருந்தாலும் அதன் கொள்கை, லட்சியங்களில் உடன்பாடு இல்லை. இதனால் அதில் இருந்து வெளியேறி ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைக்காக குரல் கொடுக்கத் துணிந்தார். “குடியரசு” வார இதழ் மூலம் சுயமரியாதை இயக்கத்தையும் தொடங்கியவர்.

மனிதனில் ஏற்றத் தாழ்வு கிடையாது. ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானம். சாதி ஒழிப்பு, பெண்ணடிமை இவைகளையே அவர் வாழ்வின் இறுதி வரை இலக்குகளாகக் கொண்டிருந்தார். அவரின் சுயமரியாதை சிந்தனையால் தான் இன்று தமிழினமே தலைநிமிர்ந்துள்ளது என்றால் மிகையில்லை. அவர் விதைத்து சென்ற பகுத்தறிவு சிந்தனைகள், சமூக நீதி கருத்துகள் தான் தமிழகம் முழுவதும் பரவி மற்ற மாநிலங்கள் தமிழகத்தை ஏக்கத்தோடு பார்க்கச் செய்திருக்கிறது.

குறிப்பாக, பெண்களுக்கு சொத்துரிமை , பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு, டாக்டர் தர்மாம்பாள், மூவலூர் ராமாமிர்தம் அம்மாள் திட்டங்கள், ஏழை பெண்களுக்கு திருமண உதவித்தொகை, கைம்பெண் மறுமண உதவித்தொகை, ஈ.வே.ரா.மணியம்மையார் ஏழை கைம்பெண் மகள் திருமண உதவித்தொகை, சமத்துவபுரம் என திட்டங்கள் பெரியாரின் கனவுத் திட்டங்களே.

பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி என்கிற வரிசையில் இன்று சமூக நீதி பேசும் நண்டு, சிண்டு வரை அனைவரும் பெரியாரின் நீட்சிகளே. அவருடைய கொள்கைகளை தான் தற்போதும் செயல்படுத்தி வருகிறார்கள். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம், பெண் ஓதுவார்கள் என்பது எல்லாம் தந்தை பெரியாரின் கனவே. 

சுயமரியாதை, பகுத்தறிவு, சமூக நீதி, இன உரிமை இவைகளால் 148 ஆண்டுகள் கடந்தும் இன்றும் நம்மோடு மட்டுமல்ல இனி வரும் தலைமுறையினரும் பெரியாரின் வழி நடந்து அவரது புகழுக்கு பெருமை சேர்ப்பார்கள் என்பதில் ஐயமில்லை.