ஓய்ந்தது கம்பீரக் குரல்... பிரபல டப்பிங் ஆர்ட்டிஸ்ட் காலமானார்!
டிரான்ஸ்பார்மர்ஸ் (Transformers) திரைப்படத் தொடர்களில் புகழ்பெற்ற ஆப்டிமஸ் பிரைம் (Optimus Prime) கதாபாத்திரத்திற்குத் தனது கம்பீரமான குரல் மூலம் உயிர் கொடுத்த பிரபல குரல் நடிகர் பீட்டர் கலன் தனது 85-வது வயதில் காலமானார். லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தனது இல்லத்தில் குடும்பத்தினரின் அன்போடு அவர் காலமானதாக அவரது குடும்பத்தினரும் முகவர்களும் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர். அவரது மறைவு உலகெங்கிலும் உள்ள சினிமா மற்றும் கார்ட்டூன் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 1984-ம் ஆண்டு வெளியான அனிமேஷன் தொலைக்காட்சித் தொடர் தொடங்கி, மைக்கேல் பே இயக்கத்தில் 2007-ல் வெளியான நேரடித் திரைப்படத் தொடர்கள் வரை பல தசாப்தங்களாக ஆப்டிமஸ் பிரைம் கதாபாத்திரத்திற்கு பீட்டர் கலன் குரல் கொடுத்து வந்துள்ளார். தனது முன்னாள் கடற்படை வீரரான சகோதரர் லாரியின் வழிகாட்டுதலின்படியே அந்த கதாபாத்திரத்திற்கான கம்பீரமான மற்றும் கனிவான குரலை உருவகப்படுத்தியதாக அவர் பல பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளார். டிஸ்னியின் 'வினி தி பூ' (Winnie the Pooh) தொடரில் ஈயோர் (Eeyore) என்ற சோகமான கழுதை கதாபாத்திரத்திற்கும் இவர் குரல் கொடுத்து மிகவும் பிரபலமானது குறிப்பிடத்தக்கது ஆகும்.
திரையுலகில் இவரது அரிய சோவையை மதிக்கும் வகையில் கடந்த 2023-ம் ஆண்டு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார். ஆப்டிமஸ் பிரைம் போன்ற வீரதீரமான கதாபாத்திரங்கள் மூலம் பல தலைமுறை ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்த பீட்டர் கலனின் மறைவுக்குப் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.